சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Saturday, May 18, 2013

ராமதாசும் அவரது அரசியலின் சில தருணங்களும்..... May, 2013



                  {மே, 2013.  வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழுநிலவுப் பெருவிழா, சித்ரவதைப் பெருவிழாவாக மாறி மரக்காணத்தில் மரண கானம் கேட்டது. சட்டசபையில் ஜெயலலிதா பாய்ச்சல், அரசியல் தலைவர்களுடன் திருமாவளவன் சந்திப்பு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஜாதிவெறியைத் தூண்டும் விதமாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ராமதாஸ் கைது, மீண்டும் வன்முறை... என வடமாவட்டங்கள் பதற்றத்தில் கிடக்கின்றன.} 

           ராமதாஸ் அவரது அரசியலின் சில தருணங்களில் அவர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையை வேறு ஏதாவது வகைகளில் அவரே குலைத்து விட்டும் போய்வுடுகிறார். அரசியல் வாதிகள் மேல் எப்பொழுதும் எனக்கு ஒரு “மிக பெரிய நம்பிக்கை” உண்டு, அது, அரசியல் ஆதாயம் இல்லாமல் எந்த ஒரு செயல்களையும் செய்யமாட்டார்கள் என்பது. சாதாரண மனிதர்கள் மிக பெரிய தவறாக கருதுபவைகள் அரசியல்வாதியின் கருத்தில் ஒரு மிக பெரிய வாய்ப்பாகவே இருக்கும். நாம் ஒரு suicidal attempt என்று நினைக்கும் ஒருவிஷயம் அவர்கள் பார்வையில் வேறுவிதமாகவே தெரிகிறது, ஒரு மிக சிறந்த வாய்ப்பாக.



          ராமதாஸின் தமிழ் மொழி சார்ந்த, இனம் சார்ந்த பிராதபங்களெல்லாம் தன்னை முன்னிருத்தவும், பெருவாரியான மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகளில் விளையாட உதவும் ஒரு டூல் ஆக மட்டுமே இருப்பதாக நினைத்திருக்கிறேன்/ நினைக்கிறேன்.. அவரால் ஏதாவது சமூக நன்மை கிடைத்திருப்பதாக கொண்டால் அது unintentional மட்டுமே. ஏனெனில் அவரது அரசியல் சமூகத்திற்கான நன்மைகானதாக என்றும் இருந்ததில்லை. அதேமாதிரி அவர் எப்பொழுதும் நம்மால் அனுமானிக்க கூடிய ஒரு டிபிகல் அரசியல்வாதி மட்டுமே. பெரிய நுண்ணரசியல்கள் ஏதும் இருப்பதில்லை.



              சாதி மற்றும் வன்முறை சார்ந்த செயல்பாடுகள் மூலம் முதலில் கவனம் பெற்றார், பின் அரசியல் அரங்கத்தில் நுழைந்தவுடன் “நல்ல” பிம்பத்திர்க்ககவும் பொது நீரோட்டத்தில் தன்னை அடையாளபடுத்திகொள்ளவும் தமிழ் மொழி/இனம் சார்ந்த கலாசார நிகழ்வுகளில தன் பெயரை முன்னிறுத்தி கொண்டார், (அவரது “சாதி இணக்கம்” இப்போதைய சாதி துவேச பேச்சுக்களாலும், “பசுமை தாயகம்”, இப்போது வெட்டப்பட்டு கிடக்கும் மரங்களாலும் பல்லிழித்து கிடக்கின்றன; இப்போதய ராமதாசின் செயல்பாடுகள் யாருக்காவது “அதிர்ச்சி” அளிப்பவையாக இருந்தால், மன்னிக்கவும், அவர்களை எளிய மனிதர்களாகவே என்னால் வகைபடுத்தமுடிகிறது). ஈசியாக கிடைப்பதும் ரொம்ப சவுகரியமானதாகவும்தான் எப்போதும் இருக்கிறதே, “முற்போக்கு முகமூடி”. ஒரு கட்டத்தில் அரசியல் அரங்கத்தில் மதிமுக, இரு பெரும் அரசியல் கட்சிகளால் கூட்டணிக்கு மதிக்கபடாமலும், அதேசமயம் அவர்களது பெரு விருப்பமாக பாமக இருந்ததும், ராமதாசுக்கு தனது அரசியல் “வழிமுறைகளின்” மேல் ஒரு மிக பெரிய நம்பிக்கையை கொடுத்தது ஆனால் அந்த நம்பிக்கை போன இரு தேர்தல்களாலும் பொய்த்துபோக ஆரம்பித்தது…. இவ்வளவுகாலங்கள் மிக பெரிய நம்பிக்கை கொண்டு பின்பற்றிய ஒரே வழிமுறையும் தோற்று போனபின், பாவம், நிலைகுலைந்து போய்விட்டார்…. அவருடைய முற்போக்கு முகமூடி ஒரு கட்டதிற்க்குமேல் தனக்கு பலனளிக்கவில்லை என்று தெரிந்ததும், தனக்கு பழகமானதுமானதும் தெரிந்ததுமான ஒரே வழிமுறையில் இப்போது இறங்கிவிட்டார்.


             அவரது இப்போதைய செயல்கள் அரசியல் வாழ்வின் தவறான முடிவுகலாகத்தான் சாதாரண மனிதர்களான நாம் நினைப்போம், ஆனால் அரசியல்வாதியாக, அவர்தனது இரண்டாவது சுற்றை மிக வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறார், என்றே நினைக்கிறேன். இப்போது நடந்த அல்லது நடந்துகொண்டிருக்கிற நிகழ்வுகளில் ஒன்று கூட அவர் எதிர்பார்க்காதது அல்ல. மதிப்பீடுகளின் வீழ்ச்சி எப்போதும் அரசியல்வாதிகளின் எழுச்சிகளுக்கு நேர்மாறானதாகதான் இருக்கிறது. இது அரசியல்வாதிகளின் மேல் இருக்கும் எதிர்மறையான நம்பிக்கை அல்ல, அவர்களது இயல்பான மனம் இயங்கு முறைமீதான நம்பிக்கை. அவர் சார்ந்த சமூகங்களில் அவர் மேலும் பலம் பெற்றுகொண்டிருக்கிறார்.அவர் இப்போது கைகொண்டிருக்கும் வழிமுறைகளில் “வெற்றி” பெற்றுவிடக்கூடாது என்று மனம் ஆசைபட்டலும், இந்த நிகழ்வுகளின் மூலம் கிடைக்கின்ற முக்கியத்துவத்தை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று ரொம்ப “தெளிந்தவர்” என்ற முறையில் அவர் மீது எனக்கு “நம்பிக்கை” இருக்கிறது. இன்னும் இரண்டு தேர்தல்கள் போதும் அவருக்கு, சாதீயத்தை முன்னிலைப்படுத்தி அரசியலில் இழந்த முக்கியத்துவத்தை மீண்டும் பெற்றுவிடுவார் அப்புறம்தான் இருக்கவே இருக்கிறதே தமிழ்/தமிழன்/முற்போக்கு முகமூடிகள்….. எடுத்து அணிந்துகொண்டால் 
போகிறது.

         இந்த வார ஒ பக்கங்களுக்காக ராமசாசுக்கு Gnani எழுதிய கடிதம் அவரை கொஞ்சமாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்... 

இந்த வார ஓ பக்கக்கட்டுரை: நீதிபதிகளுக்கும் ராமதாசுக்கும் - இரு கடிதங்கள் .

http://www.gnani.net/நீதிபதிகளுக்கும்-ராமதாச/
                                              **************************

ஞாநியின் கடிதம்





சமூகத்தில் மேம்போக்கான மாற்றங்களைச் செய்யாமல், ஆழமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற  தொலை நோக்குடன் நீங்கள் சங்கம் தொடங்கிய நாள் முதல் கட்சி வளர்த்த நாள் வரை என்னவெல்லாம் செய்து வந்திருக்கிறீர்கள் என்று கோப்புகள், ஆவணங்கள் உதவியோடு அன்று எனக்கு விளக்கினீர்கள். சினிமாவை சார்ந்திராத சுயேச்சையான தொலைக்காட்சி நடத்துவது, தாய்மொழிக் கல்வி, அரசின் நிதி நிலை அறிக்கைக்கு துறை வாரியாக மாற்று யோசனை அறிக்கைகள் , பூரண மதுவிலக்கு என்ற பல கொள்கைகள் எனக்கும் உடன்பாடானவையே என்று நானும் உங்களிடம் சொன்னேன்.

அனைத்தையும் விட வட தமிழகம் முழுவதும் நீங்களும் தொல். திருமாவளவனும்  சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் வாயிலாகக் கடந்த சுமார் பத்தாண்டுகளாக ஏற்படுத்தியிருக்கும் சாதி சமரச அமைதி உணர்வு மகத்தானது என்பதை நான் உங்களுக்குச் சொன்னேன். ஏனென்றால் வன்னியர்களை நான் ஆதிக்க சாதியாகக் கருதியதில்லை. தீண்டாமை என்ற ஒற்றை அம்சத்தைத் தவிர வன்னியரும் பறையரும் ஒரே அடித்தள வாழ்நிலையில்தான் வட தமிழகத்தில் வாழ்கிறார்கள் என்பதை அந்த மண்ணின் மைந்தனான நான் நேரடியாக அறிவேன்.


விடலைக் காதலை நானும் ஆதரிக்கவில்லை. காதல் நாடகங்களை நானும் ஆதரிக்கவில்லை. மிரட்டிப் பணம் வசூலிக்கும் கட்டப் பஞ்சாயத்தை நானும் ஆதரிக்கவில்லை. மனித நேயமும் சமத்துவமும் விரும்பும் எவரும் ஆதரிப்பதில்லை. ஆனால் நீங்கள் காண மறுக்கிற முக்கியமான உண்மை என்னவென்றால் இந்த அட்டூழியங்கள் எல்லாம் ஏதோ ஒரு சாதியினர் மட்டும் செய்பவை அல்ல. இப்படி செய்வோர் எல்லா சாதிகளிலும் எல்லா கட்சிகளிலும் - உங்கள் கட்சி உட்பட - இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரையும் நம் சமூகம் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுதான் தீர்வே தவிர. பழியை ஒற்றை சாதி மீது மட்டும் போட்டு இதர சாதிகளை ஓரணி திரட்டும் உங்கள் முயற்சி தவறானது என்பதை உங்களிடம் சொன்னேன்.

இந்த தவறின் விளைவாக என்ன ஆயிற்று ? சாதி சங்கத்தலைவர் என்ற குறுகிய வட்டத்திலிருந்து எல்லாருக்குமான பொதுவான அரசியல் தலைவர் என்ற பிம்பத்தைப் பெறத்தொடங்கிய நீங்கள் மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கே போய் சேர்ந்துவிட்டீர்கள். எப்படிப்பட்ட வீழ்ச்சி இது உங்களுக்கு ! பொது மேடையிலும் தனிப் பேச்சிலும் கண்ணியமாகவும் கறாராகவும் பேசுபவர் என்ற பிம்பம் நொறுங்கி, மாமல்லபுர மேடையில் உங்கள் சகா காடுவெட்டி குருவே வெட்கப்படும் அளவுக்கல்லவா உங்கள் பேச்சு தரம் தாழ்ந்துபோயிற்று !


திராவிடக் கட்சிகளின் ஊழல் முகத்துக்கு முன்னால் இருக்கும் முற்போக்கு சாயம் முற்றிலுமாக வெளுக்கும் வரை கூட இருந்து உங்களை வளர்த்துக் கொண்ட நீங்கள், இனி அவற்றுடன் கூட்டு இல்லை என்று அறிவித்தபின் செய்திருக்க வேண்டியது என்ன ? அவற்றை விட முற்போக்கான அமைப்புகளுடன் அல்லவா அணி சேர்ந்து தமிழகத்தில் புதிய அரசியல் பார்வை தழைக்க முயற்சித்திருக்க வேண்டும் ? நீங்களோ, திராவிடக் கட்சிகளை விட பிற்போக்கான சாதி அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் உடனடிப் பயனாக, சிறையில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

இந்த நேரத்தில் யோசியுங்கள். ஏன் உங்கள் அரசியல் இப்படி வீணாயிற்று ? நீங்கள் அரசியலில் நுழைந்த நாட்களிலேயே என்னைப் போல மிக சிலர் உங்களுடைய ரோல் மாடலே சரியில்லை என்றே கருதினோம். உங்களுக்கு ஒரு ரோல் மாடல் கலைஞர் கருணாநிதி. மற்றவர் செல்வி ஜெயலலிதா. இரண்டாமவரை அரசியலில் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளவே இயலாது. ஒரு எம்ஜிஆர் இல்லையென்றால் அவர் இல்லை. எம்ஜிஆர் போன்ற செல்வாக்குடையவர் ஆசி இல்லாமல் வரும் நீங்கள் பின்பற்றியது கருணாநிதியின் ரோல் மாடலைத்தான். அவர் ஆசி வழங்க அண்ணா இல்லையென்றாலும் அரசியலில் மேலே வந்திருக்கக்கூடிய ஆற்றல் உடையவர்.

கலைஞரிடமிருந்து எங்கும் தமிழ், சாதிய எதிர்ப்பு, சமூக நீதி என்ற கோஷங்களையெல்லாம் எடுத்துக் கொண்ட நீங்கள் அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும். அவருடைய குடும்பப் பாசம், சுயநல அரசியல், வாரிசு ஊக்குவிப்பு, ஊழல், அராஜகம் என்ற அத்தனை எதிர்மறை அம்சங்களையும் எடுத்துக் கொண்டீர்கள். அவரை இன்று வீழ்த்திய அதே அம்சங்கள் உங்களையும் வீழ்த்திவிட்டன. கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் இல்லாத ஒரு பலம் - ஒரு பெரும் சாதியின் பிரதிநிதி என்ற பலத்தை - உங்களுக்கு எதிரான பலவீனமாக இன்று ஆக்கிக் கொண்டீர்கள். வாரிசு அரசியலால் உங்களுக்கு எந்தப் பயனுமில்லை. ஸ்டாலின் கலைஞருக்கு உதவும் அளவு கூட அன்புமணியால் உங்களுக்கு அரசியல் பயனில்லை.அவருக்குத்தான் உங்களால் லாபம். கடைசியில் நீங்கள் காடுவெட்டி குருவைத்தானே நம்புவராக ஆகிவிட்டீர்கள் !

உங்களுடைய இன்றைய சாதி அரசியல் வரப் போகும் தேர்தலில் உங்களுக்கு துளியும் உதவப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்நியர் ஓட்டு வன்னியர்க்கில்லை என்று ஆக்கிவிட்டீர்கள். நீங்கள் தேர்தலில் ஜெயிக்காமல் போனால் நாட்டுக்கு எந்த இழப்புமில்லை. ஆனால் உங்கள் சாதி அரசியல் உங்கள் சாதியினருக்கே எதிரானது. மாமல்லபுரத்தில் நீங்கள் சாதி வெறியைத் தூண்டியதால் தலித்துகள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உங்கள் சாதியினர் இருவரும் செத்தார்கள். அடித்தட்டில் இருக்கும் இரு சாதியினர் கைகளில் எழுதுகோல் ஆயுதத்தைக் கொடுக்க வேண்டிய மருத்துவர் நீங்கள். மனிதக் கறி வெட்ட, கத்தியைக் கொடுக்கும் கசாப்பு கடைக்காரராகிவிட்டீர்கள்.

சிறையில் இதையெல்லாம் பொறுமையாக சிந்தியுங்கள். நீங்கள் அறிவும் சிந்திக்கும் திறனும் உடைய 73 வயது மூத்த குடிமகன். நீங்களும் உங்களோடு சிறை புகுந்தோரும் இருக்க வேண்டிய இடம் சிறையல்ல. பல்கலைக்கழகம். வெளியே வரும்போது தவறைத் திருத்திக் கொள்ளுங்கள். சாதியக் கூட்டமைப்பை கலைத்துவிட்டு ஆரோக்கியமான மாற்று அரசியலை முன்வையுங்கள். உங்கள் ரோல் மாடலாக காந்தியையும் மண்டேலாவையும் அம்பேத்கரையும் எண்ணிப் பாருங்கள். காடுவெட்டி குருக்களுடன் எதிர்கால வாழ்க்கையை செலவிடுபவராக உங்களை நீங்கள், மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது ஒரு முறையேனும் நினைத்துப் பார்த்திருப்பீர்களா என்று யோசியுங்கள்.





Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home