விஸ்வரூபம் படம் தடையை முன்னிறுத்தி .....
விஸ்வரூபம் படம் தடையை முன்னிறுத்தி ....2 பிப்ரவரி, 2013 12:00 AM
நீதிமன்றதிலும் அதற்கு வெளியேயும் விஸ்வரூபத்தை முன்னிறுத்தி தமிழக அரசு செயல்படும் விதத்தையும் பார்க்கும் போது இந்த பிரச்சனைக்கும் மதத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாக தெரிகிறது. இது அரசியல் மற்றும் தனிமனித பழிவாங்கல்கள் மட்டுமே என்று புரிகிறது. மதம் இங்கு அரசியல் எடுத்து கொண்ட ஒரு கொள்ளிக்கட்டை மட்டுமே. மதம் எப்போதும் அப்படிதானே இருந்திருக்கிறது, மனித வரலாறு முழுவதும், ஆதி காலம் முதல் அரசர்கள் காலம் தொட்டு இப்போது வரை..... மதம் எப்போதும் அரசியல் அதிகாரங்களை அண்டியே தன்னை நிலைநிறுத்த முயன்றிருக்கிறது. (ஆன்மீகத்தை மதத்துடன் குழப்பிக் கொள்ளத் தேவை இல்லை; இரண்டும் வெவ்வேறானது) அதனுடைய பலம் அவ்வளவு மட்டும்தான் போல, அதற்க்கென்று தனித்த எந்த பலமும் இல்லை போலும், அரசியல் மனித மனங்களை ஊடுருவிய அளவு மதம் ஊடுருவவில்லை என்றே நினைக்கிறேன், இல்லையெனில் வாழ்நாள் முழுவதும் தன் பாதத்திலே கிடக்கும் தனக்காக வாழ்வையே அர்ப்பணிக்கும் ஒருவனை, ஒவ்வொரு மதத்தின் ஒற்றை நோக்கமான அன்பு செய்தல் என்ற ஒரு நோக்கத்தை கூட அவன் மனதிற்கு கடத்தமுடியாத, சக மனிதனை அவன் இயலாமையை பழி சொல்ல எவ்வித தயக்கத்தையும் கொடுக்க முடியாத மதம் உள்ளீடற்றதாகவே இருக்க முடியும். இன்று எங்கெங்கு காணினும் அரசியலே வியாப்பித்திருக்கிறது. எல்லோருக்கும் ஒரு மதம் என்பதைவிட எல்லோருக்கும் ஒரு அரசியல் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. ஒவ்வொரு மதமும் அரசியலும் பொருந்தா இனக்கலப்பு திருமணம் செய்துகொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், மதம் அரசியலை அண்டி பிழைத்தே வாழமுடியும், அதற்க்கு வேறு நாதி இல்லை. மனித விழுமியங்களை தோற்கடிப்பதில் ஒன்றுக்கு மற்றொன்று சளைத்ததில்லை. வாழ்க இவ்வையகம்.
****************************
****************************
இன்று விஸ்வரூபம் படம் பார்த்தேன்!!!....... இந்த கதை களனை கமல் எடுத்திருக்க கூடாது என்று நாம் "சொல்லலாம்", ஆனால் இதுதான் கதை களன் என்றால், ஒரு கமர்சியல் படமாக இதை வேறு எப்படி எடுத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதில் சொல்லபடுவது எல்லாம் தலிபான்கள் நடத்தி காட்டிய ஒன்று என்றுதான் ஊடகம் மூலம் அறிந்திருக்கிறோம், ஒரு வேளை அது அப்படி அல்ல, அது மேல் நாட்டு ஊடக அரசியல் என்று ஒருவேளை நம்மால் சொல்லமுடியும் என்றால், இப்படத்தையும் தவறு என்று சொல்லலாம். இல்லையெனில் அரசியல் சரிகளோடு எடுப்பது இந்த கதை களனுக்கு செய்யும் நியாயம் அல்ல. "இஸ்லாமியர்கள் புண்படுவார்கள் " என்றால், அது உண்மைதான், ரிஷானா கொலை தவறு என்று சொன்ன மபு கருத்துகளால் புண்பட்ட இஸ்லாமியர்கள் இதற்கும் கண்டிப்பாக புண்படத்தான் செய்வார்கள். அதை சொல்வது மிக சிக்கலான பிரச்சனை, ஏனெனில் தாலிபன்கள் செய்தது எல்லாம் இறைவன் பெயராலேயே செய்யப்பட்டது, இறைவனுக்காகவே செய்யப்பட்டது , அதை சொல்லும் பொது அந்த இறையோடு தன்னை இணைத்து கொண்டுள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களும் மனச் சிரமத்திர்க்கு ஆளாகவே செய்வார்கள், அந்த மனச்சிரமம் அவர்களை சிந்தனையின் பால் உந்தித்தள்ளி மனத்தெளிவை உண்டு பண்ணும் என்று நம்பிக்கை கொள்ள மட்டுமே நம்மால் முடியுமே அன்றி இது பேசப்படவே கூடாது என்று சொல்ல முடியாது. இப்படத்தில் இஸ்லாம் சிறுமை செய்யபடுவதாக நான் கருதவில்லை, இஸ்லாமை முன்னிறுத்தி தாலிபான்கள் பற்றி மட்டுமே பேசப்பட்டிருக்கிறது. தலிபான்கள் தீவிரவாதமும் இஸ்லாமும் ரொம்ப பின்னி பிணைந்தது , எனவே "மிக சிறந்த " அரசியல் சரிகளுடன் இப்பிரச்சனையை பேசுவது இந்த கதை களனுக்கு செய்யும் துரோகம் என்றே கருதுகின்றேன், அதையும் மீறி கமல் மிக கவனமாக அந்த வேறுபாடை அப்பப்போ காட்டி கொண்டே தான் வந்துள்ளார் (சில இடங்களில் கொஞ்சம் அதிகமாகவே, கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு மிக பெரிய அழிவை தடுக்க போகும் அந்த உச்சகட்ட நிகழ்வில், அறைக்குள் இஸ்லாம் தீவிரவாதி தொழுகை செய்யும் போது, கமல் அறைக்கு வெளியே தொழுகை செய்து கொண்டிருப்பார், தேசிய கீதம் பாடப்பட்டு கொண்டிருக்கும் பொது, தன தங்கை கற்பழிக்கபட்டலும்,அட்டென்சனில் ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அர்ஜீன், சத்யராஜ் வகையறாக்களுக்கு இணையான மிக அபத்தமான காட்சி என்றாலும், கமல் சொல்ல வருவது இஸ்லாமிற்கும், தீவிரவதத்திர்க்கும் இடையிலான வேறுபாட்டைதான்.) ஒரு நாவலாக இது எழுதப்படும்போது, ஒரு எழுத்தாளன் "இடை புகுந்து " நாவல் முழுவதும் கூட அந்த வேறுபாட்டை தன கருத்துகளாக சொல்லி கொண்டே இருக்கலாம், ஆனால் திரைப்பட மொழியில் அது மிக தவறானது என்றே கருதுகின்றேன். குஜராத் கலவர காட்சிகளோ அல்லது மதத்தின் பெயரால் நடக்கும் மதுபான விடுதி பெண்கள் தாக்குதல்களோ, காதலர் தின சூரையாடல்களோ காட்டப்படும் போது அந்த முட்டாள்தனங்கள் மேல்தான் எனது கோபம் எழுகிறது, ஆனால் அதைக்கானும் ஒரு பஜ்ராங்க்தல் ஆட்களோ விஹெச்பி ஆட்களோ மனம் புண்படுவார்கள் என நான் கவலைப்பட்டு கொண்டிருக்க முடியுமா என்ன? அப்படி புண்பட்டால் படத்தான் வேண்டும், அதேபோல் அல்லாவோடு தன்னை உணர்வுகளால் இணைத்து கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை இது புண்படுத்தவே செய்யும், அது இயல்பானதுதான் , ஆனால் அவர்கள் அதை தாண்டி வரவே வேண்டும். ஆனால் அடிப்படை வாதிகளால் சலவை செய்யப்படாத எந்த இஸ்லாமியருக்கும் இங்கு உணர்த்தப்படும் வித்தியாசம் புரியச் செய்யும் என்றே நினைக்கிறேன். நன்றி.
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home