ஞாநி - சுவாமி அக்னிவேஷ் - மது ஒழிப்பு
2015 ஜனவரியில் The people's movement against Liquor and Drugs (PMALD) என்ற அமைப்பு கன்யாகுமரியில் இருந்து சென்னைக்கு மது ஒழிப்பு நோக்கத்தை முன்வைத்து 100 நாள் நடை பயணம் மேற்கொண்டு அது சென்னையில் நிறைவடைந்தது. விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது. அந்த மதுவுக்கு எதிரான விழாவை தலைமை ஏற்று நடத்தியது சுவாமி அக்னிவேஷ். அதில் கலந்து கொள்ள ஞாநி என்னையும் அவருடன் அழைத்துப் போனார். சுவாமி அக்னிவேஷ் என்ற பெயரை கேள்விப்பட்டிருந்தாலும் ("சுவாமி" என்ற முன்னோட்டே ஏதோ இந்துத்துவா போல என்று மனம் டிஃபால்ட்டாக நினைத்து கவனத்தை குறைத்து விடுகிறது ) ஞாநி சொல்லித்தான் அவரை பற்றி முதலில் அறிந்தேன்.
ஞாநி மதுவை ஒரு ஒழுக்கவியல் பிரட்ச்சனையாக பார்க்கவில்லை என்பதே ஞாநி உடனான எனது உரையாடல் மூலமான எனது புரிதல். அதை சமூக தீமை/ பிரட்சனையாகத்தான் பார்த்தார். சமூக பிரட்சனையாக பார்ப்பதால், அதை "பியர் மட்டும் அனுமதி" என்ற குறைந்த தீமையை முன்வைத்து முதலில் முன்னெடுக்கலாமே, பின் முழு மது விலக்கை நோக்கி போகலாமே என்று ஞாநியை கெஞ்சிக் கேட்டேன்.(), மறுத்துவிட்டார். “ சரன், எந்த களச்செயல்பாட்டிலும் அதனுடைய இறுதி நோக்கத்தை முன்வைத்துதான் எந்த போராட்டத்தையும் ஆரம்பிக்க முடியும். அதன் ஆரம்பித்திலேயே இதுமாதிரி சின்ன சின்ன காம்ப்ரமைஸ்களை செய்ய ஆரம்பித்தோம் என்றால், இறுதி நோக்கம் சிதைந்து போகும், பின் அதை அடைவதற்கான உத்வேகமும் நம்மிடம் இருக்காது, அதை தீவிரமாகவும் செயல்படுத்த முடியாது, if you give concessions on what you don’t even have yet, you will lose your desire to attain it” என்றார். “அப்ப இறுதி நோக்கத்தை அடைந்தவுடன் இப்படி ரிலாக்ஸ் பண்ணலாமா என்றேன்” விடாமல், “அடைந்தவுடன் இதை கன்சிடர் பண்ணலாம்”. என்றார்.
லயோலா கல்லுரியில் அன்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து மதுவுக்கு எதிரான எண்ணத்துடன் நிறைய பேர் வந்திருந்தார்கள். ஞாநியிடம் அவர்களின் வாழ்க்கையில் மது நிகழ்த்திக் கொண்டிருக்கும் தீமையை, வன்முறையை பகிர்ந்து கொண்டார்கள். தன் குடி அடிமை கணவணால் ஏற்பட்ட உடல் காயங்களை காண்பித்தார் ஒரு பெண். ஒரு பெண் குடியால் விதவையாகி குழந்தைகளை வளர்க்க படும்பாட்டை விவரித்தார். இளம்வயது பையன் தந்தையினால் ஏற்பட்ட கொடுமைகளை விவரித்தார். நிறைய தீவிரமான குரல்களை ஞாநியுடன் இருந்து கேட்டேன். அதையெல்லாம் கேட்டபோது “பியர் மட்டுமாவது” என்று நான் கன்ஷசன் கேட்டது சிறுபிள்ளைதனமாக தோன்றியது .
ஞாநி மேடையில் “ முழு மது விலக்கே இந்த மது கொடுமையை ஒழிக்கும், மதுவுக்கு எதிரான சமூக புறக்கணிப்பே இதை ஒழிக்கும். குடிப்பவர்கள் குடும்ப விஷேசங்களில் மற்றவர்கள் பங்கேற்காமல் சமூக புறக்கணிப்பை செய்வதுதான் இதற்க்கு தீர்வாக இருக்கும்” என்று தீவிரமாக பேசினார். கிருஷ்ணம்மாள் ஜெகனாதனும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
அன்றுதான் எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை பாராட்டி தி நகரில் விஸ்னுபுரம் அமைப்பு சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்திருந்தோம். எனவே ஞாநியிடம் சொல்லிவிட்டு நிகழ்சி முடியும் முன்பே கிளம்பிவிட்டேன்
Count The Moments |
0 Comments:
Post a Comment
<< Home