சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Wednesday, August 19, 2020

----மதமும் நல்லாட்சியும்------

----மதமும் நல்லாட்சியும்------

"மதம் அரசியலின் அடிப்படையாக அமையும் அத்தனை நாடுகளும் பொருளியல் வீழ்ச்சியைச் சந்திக்கும், சமூகநீதியும் உடன் அழியும்" என்று சொல்லும் இந்த கட்டுரையை ஜெமோ இப்படி ஆரம்பிக்கிறார் //அதே கருத்தை குறைந்தது இருபது முறையாவது இதே தளத்தில் சொல்லியிருப்பேன். சிலநாட்களுக்கு முன்புகூட எழுதியிருந்தேன்....//

உபி முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கூட ஜெமோ இப்படி வெளிப்படையான மத அடையாளத்துடன் ஒருவர் அரசுப்பதவியை ஏற்பது எப்படி மிகமிக எதிர்மறையான விளைவுகளை இந்திய அரசியலில் உருவாக்கும், ஏன் அரசு பதவி என்பது மதச்சார்பின்மையின் குறியீடாக இருக்க வேண்டும், இது பொருளியலில் மற்றும் ஜனநாயக நம்பிக்கைத்துவத்துக்கு மாபெரும் பின்னடைவை கொண்டுவரும் என்று சொல்லி இருந்தார்.

ஆனால் ஏறக்குறைய 20 முறைதான் சொல்லி இருக்கிறார் என்பது கொஞ்சம் கஷ்டம்தான், ஒரு 50 முறையாவது அது சொல்லப்படவேண்டும், ஏனெனில் இங்கு அறிவு வேலை செய்யாது, அதுதான் இந்த மத அரசியலின் முதன்மையான அபாயம். ஏனெனில் மதம் அகவயமானது, குறியீட்டுரீதியிலானது, ஒருவனின் அந்தரங்கத்துக்குள் இயங்குவது. அப்படி ஒன்று அரசியலில் பெரும்பான்மையினரின் மத அடையாளத்தை முன்வைத்து நிகழ்த்தப்படுவதால் இந்த மக்களின் "தன்-அடையாள சார்பு" அதன் எல்லா தவறுகளையும் மிக எளிதாக கடந்து செல்ல வைக்கும். இயல்பாக அதன் தவறுகளை நியாயப்படுத்தும், அதன் தவறை சுட்டுவது தன்னையே சுட்டுவதாக கொள்ளும்.... பயலாஜிக்களாகவே Ethical Amnesia செயல்பட தொடங்கும் இடம் இது. இது மிக அபாயகரமானது. மீழ்ச்சியில்லை.

அதனால்தான் "சுய சாதி எதிர்ப்பு" என்பதை கூட கேள்வியே கேட்காமல் ஆதரிக்க வேண்டும் என்பது, ஏனெனில் அது மிக கடினமான ஒன்று. சாதி, மதம் எல்லாம் மனிதனின் ஆதார பயத்துடன் தொடர்புடையது. அதை வெல்வது சிரமம். அதனால்தான் ஆணவக் கொலை என்ற பெயரில் சாதாரண மக்களால் கொடூர கொலைகளை எளிதாக நிறைவேற்ற முடிகிறது, அதை ஒரு சமூகமே வெளிப்படையாக ஆதரிக்க முடிகிறது. இங்கு மதம் என்ற ஒன்றை அரசியலில் முன்வைத்து இன்னும் எந்த அளவுக்கும் இந்தியாவை கீழிறக்கலாம். அது அறிவை சிறிது கூட தீண்டாது. இந்தியாவின் அபாயம் இங்குதான் கிளர்ந்தெழுகிறது. அதனால்தான் சொல்கிறேன் இன்னும் எவ்வளவு தவறுகள் செய்யட்டும், பிஜேபி மேலும் மேலும் இந்த மக்களால் ஆதரிக்கப்படும், இதில் வலு குறைவதற்கான எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. அடுத்த முறையும் இவர்கள் வருவதற்கான எல்லா சாத்தியங்களும் உள்ளது.

அதனால்தான் உங்கள் சார்புகளை அறிவார்ந்த தளத்துக்கு கொண்டுவந்து விவாதிக்காதீர்கள் என்பதை பிஜேபி நண்பர்களிடம் திரும்ப திரும்ப முறையீடாக சொல்லிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது. அதை சலிக்காமல் சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும், முறையீடாக.... வேறு வழியில்லை.

அரசியல் என்பது அறிவார்ந்த தளம். அரசியல் அதன் தளத்தில் இன்னொரு அரசியல் நடவடிக்கையினால்தான் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அரசியல் மதத்தால் எதிர்கொள்ளப்படடால், அதன் எல்லா தவறுகளுக்கும் மதம் சார்ந்த இந்த பெரும்பான்மை மக்களின் உடனடி மன்னிப்பு கிடைக்கும், அது அரசியலின் அடிப்படைகளை அழித்து, மக்கள்நலனை புறக்கணித்து, நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.

இவர்களின் மத அரசியல் அதோடு நிற்க்கவில்லை. அது பண்பாட்டு அடையாளங்களையும் உணர்ச்சிபூர்வமான குறியீடுகளாக ஆக்கி, அதையும் ஒற்றைப்படையாக்கி, தன்-அடையாளமாக பெரும்பான்மை மக்களை அதன் கீழ் தொகுத்து, அதன் மீதான எந்த விமர்சனத்தையும் இந்திய பண்பாட்டை எதிர்பவர்களாக முத்திரை குத்தி விவாதமே இல்லாமல் தீர்ப்புகளை வழங்க ஆரம்பித்துவிடடார்கள். மதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்த பெரும்பான்மை மக்களின் மத சார்பை தனது அரசியலுக்கு அறுவடை செய்து கொள்வது ஒருபக்கம், இன்னொரு பக்கம் அவர்கள் இவர்கள் அரசியலை எதிர்ப்பவர்களை அவர்கள் மதத்தை எதிர்பவர்களாக/ பண்பாட்டை எதிர்ப்பவர்களாக/ இந்தியாவையே எதிர்பவர்களாக சுட்டி அதன்முலம் அரசியல் அட்வான்டேஜ் பெற்றுக்கொள்வது. நீங்கள் மதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்திர்கள் என்றால் அரசியல் எதிர்ப்பில் அடிபடப்போவது உங்கள் மதமும்தான்.... அதை தவிர்க்க முடியாது. எது உங்களுக்கு மிக முக்கியம் உங்கள் மதமா, அரசியலா? அரசியல் ஆதாயத்துக்காக மதம் பலியிடப்படுவதில் உண்மையில் சம்மதமா??
“When politics and religion are intermingled, a people is suffused with a sense of invulnerability, and gathering speed in their forward charge, they fail to see the cliff ahead of them.” — Frank Herbert ஜெமோவின் கட்டுரை https://www.jeyamohan.in/137750/

Labels: , ,

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home