சிங்கா - சிங்கி

சிங்கபூர்வாழ் சிங்கா - சிங்கிகள்
From The Man Who Makes His Own Rules...

Monday, June 22, 2020

போலி அரசியல் கதையாடல்

[நண்பர்
Karl Max Ganapathy
யின் கட்டுரையை முன்வைத்து ]

முக்கியமா அந்த கட்டுரை அரசியலில் False Narrative, போலி அரசியல் கதையாடல் பற்றி பேசுது. தன்னை எப்போதும் பாதிக்கப்படடவர்களாக, அப்பாவியாக நினைக்க விரும்பும் பெரும்பான்மையான மக்கள் மனதுக்கு இந்த False Narrative எஃபக்ட்டிவ்வானது. play the victim is a self-fulfilling prophecy.... ஒரு தவறான செய்தியை மக்களிடம் பரப்ப வேண்டுமா, அதில் கொஞ்சம் உண்மையை கலந்துவிடுங்கள். அந்த பொய்யை நம்பவிரும்பும் மனதுக்கு அந்த உண்மைதான் ஊன்றுகோல். மூளை சோம்பேறித்தனம் அந்த ஒற்றை உண்மையில் மட்டுமே தொங்கி அத்தனை பொய்களையும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளும்.

இந்த அரசியல் கதையாடல்களுக்கு எதிரா எதிர்கடசிகள் இன்னொரு கதையாடலைத்தான் வைக்க முடியும்.... counter narrative. முன்பு முன்வைக்கப்படட அந்த false narrative வை தர்க்க பூர்வமாக சிதைக்க முடியாது. அதுதான் கதையாடல்களின் வலிமை. அதிலிருக்கும் ஒற்றை உண்மை மட்டுமே போதும் அதிலிருக்கும் ஓராயிரம் பொய்களை புறக்கணித்து அந்த False Narrative வை தனக்கானதாக ஏற்றுக்கொள்ள.

அரசியல் என்பது மக்கள் நலதிட்டங்களால், வளர்ச்சியால், நாட்டின் உள்கட்ட்டமைப்புகளால், மக்களுக்கு செய்யப்படட வசதிகளால் நடத்தப்படுவது கிடையாது. அது குறுகிய ஒரு மக்கள் கூட்டத்துக்குத்தான். அவர்கள் ரொம்ப கொஞ்சம். பெரும்வாரியான மக்களுக்கு இந்த அரசியல் கதையாடல்கள்தான், தம் மனது நம்பும் இந்த கதையாடல்களுக்கு அறிவு நியாயம் செய்ய வளர்ச்சி, பொருளாதாரம் எல்லாம் பொதுவாக பேசப்படும், ஆனால் அவர்களுக்கு அது அவ்வ்ளவு முக்கியம் இல்லை, அப்படி வளர்ச்சி சார்ந்து ஒன்றுமே இல்லை என்றாலும் கூட அவர்கள் மனம் மாறாது என்பதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதுதான் கதையாடல்களின் வலிமை. ஆயுள் அதிகம். ஒரு முறை மனதில் அதை ஏற்றிவிடடால் போதும் அதற்க்கு முன் வேறு எத்தனை ஆதாரங்களை கொண்டுவந்தாலும் அதை மாற்ற முடியாது.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் எப்படி இந்த போலி கதையாடல்களை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதில்தான் அவர்கள் வெற்றி இருக்கிறது. அறிவார்ந்து ஆதாரங்களை முன்வைத்து ஏன் அவை போலி என்று சொல்லுவது எந்த அளவு பயனளிக்கும் என்று தெரியவில்லை. பயனளிக்காது, பயனளிக்கவில்லை என்பதே என் எண்ணம். சொல்லும் ஒவ்வொரு பொய்களையும் உடைத்து அது எந்த அளவு பொய்கள் என்று அவர்களை கேலிக்குள்ளாக்கினாலும், இன்னும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய்களை பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள் எனில் அதன் உச்ச சாத்தியம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. கற்பிதங்களாக சமூகத்தில் ஏற்கனவே நிலைபெற்றுவிடடவைகளை ஒட்டி, அந்த கதையாடல்களை ஒட்டி சொல்லப்படுபவை எவ்வளவு அப்படடமான பொய்கள் என்றாலும் அது நம்பபப்டும், பரப்பப்படும். ஏனெனில் அவர்கள் மனம் விரும்பும் ஒன்று அது, அது பொய் என்பது அந்த மனதுக்கு ஒரு பொருட்டே இல்லை. எனவே இந்த போலி கதையாடல்களை உடைப்பது அவ்வளவு எளிது அல்ல. இன்னொரு "மாற்றுக் கதையாடல்" (counter narrative ) மட்டுமே இதை எதிர்கொள்ள முடியும். எதிர்க்கட்சிகளுக்கு இது அவ்வளவு எளிதானது அல்ல. பாப்போம்.

---
Karl Max Ganapathy
யின் கட்டுரை:
சீனப் பொருட்கள் நம் சந்தையை நிறைப்பது குறித்து உரையாடல்கள் எழுகின்றன. எல்லைப் பதட்டம் இருப்பதால், சங்கிகளும் அதை ஜாலியான விளையாட்டாகக் கடைவிரித்து – அவர்கள் சீரியஸாகத்தான் செய்கிறார்கள், நம்மிடம்தான் காமெடியாகிறது – நம்முன் வைக்கிறார்கள். நம் சூழலில் அறிவியல் என்றால் அது ஏதோ மாய வித்தை போல இருக்கிறது. அறிவு சார்ந்த ஒன்று நம்மிடம் வருவதை விட பல மடங்கு வேகத்தில் வதந்தி வந்து சேர்ந்து விடுகிறது. அண்டை நாடுகளுடனான பதட்டங்கள் மற்றும் போர்கள் மக்களின் சுபாவத்தில் செலுத்தும் ஆதிக்கம் அளவிட முடியாதது. இரண்டாம் உலகப் போர் மட்டுமே ஆயிரக் கணக்கான வழிகளில் விஞ்ஞான வளர்ச்சியை நோக்கி ஐரோப்பிய நாடுகளை உந்தித் தள்ளியது என்றால் உங்களால் நம்பவே முடியாது. ஜப்பானும் அப்படித்தான். இந்த விவாதங்களில் சீனாவை நாம் பல ஆண்டுகள் மறந்துவிட்டிருந்தோம். ஆனால் கம்யூனிஸ அமைப்பிற்கு உள்ளேயே அவர்கள் ஒரு புது ஃபார்முலாவை கண்டுபிடித்து செயல்படுத்தத் துவங்கி முப்பதாண்டுகளுக்கு மேல் ஆகிறது. முதலாளித்துவத்தின் எளிய சூத்திரம்தான். குறைந்த விலை. அது மட்டுமே தாரக மந்திரம். குறைந்த விலைக்கும், பரந்த சந்தைக்கும் நேரடியான தொடர்பு உண்டு. அதை சாதிக்கும் வலுவான தொழில்நுட்பப் பின்னல், தெளிவான Supply network. நீங்கள் மார்வாடிகளைக் கவனித்தாலே போதும். அவர்கள் சந்தையை வளைப்பது அப்படிதான்.
ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆவடியில் TI சைக்கிள் கம்பெனி இருக்கிறது அல்லவா, அது பல ஆண்டுகளாக இருப்பது உங்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட அம்பாசிட்டர் கார் கம்பெனி மாதிரி. உங்களுக்குத் தெரிந்து சைக்கிளில் எத்தனை மாடல்களை அவர்கள் இறக்கினார்கள் என்று யோசித்துப் பாருங்கள். தொன்னூறுகள் வரை ஒரே மாடல் சைக்கிள்தான். இரண்டாயிரமாவது ஆண்டுகளில்தான் அவர்கள் கொஞ்சமாக உறக்கம் கலைந்தார்கள். அதுவரை ஒரே கிரைண்டர் ஒரே மாவு. கிட்டத்தட்ட வெளிநாட்டு பிராண்ட் கார்கள் இங்கு தொழிற்சாலைகளைத் திறக்கும் வரை நமது உள்நாட்டு கார் கம்பெனிகள் சுட்ட ஒரே வடையைப் போல. அந்த விஷயத்தில் மோடி கூட பரவாயில்லை. வடை ஒன்றாக இருந்தாலும், அதன் வண்ணங்களில் ஜாலம் காட்டுவார். பார்க்கும்போதே எச்சில் ஊறும். அதைக் கூட செய்யவில்லை நமது கார் கம்பெனி ஓனர்கள். மன்மோகன் வந்து சந்தையைத் திறந்து விட்டதும் இவர்கள் ஒப்பாரி வைத்து அழுததைப் பார்க்கக் வேண்டுமே.
அப்போது ஒரு ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நான் மெஷின்ஷாப் எஞ்சினியராக பணி புரிந்துகொண்டிருந்தேன். அது அசோக் லேலன்ட், டிவிஎஸ் போன்ற பல முன்னனி நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரித்து சப்ளை செய்து வந்தது. அப்போது ஒரு ஜப்பானிய நிறுவனத்துக்கு காரில் இருக்கும் ஆயில் ஃபில்டர் சப்ளை செய்வதற்காக ஆரம்ப கட்ட டிசைனிங்கில் இருந்தோம். முதல் சாம்பிள் ரெடி செய்து ஓகே ஆகிவிட்டால் அடுத்த ஆர்டர்கள் கிடைக்கும். கிட்டத்தட்ட அந்த ஃபில்டரை ரெடி செய்துவிட்டோம். அது பைலட் பீஸ் என்பதால், செய்யும் பிராசஸ்களில் திட்டமிட்ட வழிமுறை இருக்காது, ஆனால் உற்பத்தித் தொடங்குகையில், என்னென்ன முன்னேற்றங்கள் செய்வோம் என்று எழுதி ரிப்போர்ட்டாக வைத்திருந்தோம். அவர்கள் ஒரு சாம்பிள் ஃபில்டர் எங்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களின் detailed material specifications and break up ம் கொடுத்துவிட்டார்கள். அதை செய்வதற்கு பைப் பெண்டிங் மெஷின், பிரஸ், வெல்டிங், சால்டரிங் போன்றவை தேவைப்படும் என்பது எங்களது தியரி. நாங்கள் இந்த மரபார்ந்த வழிமுறையின் வழியாகவே எங்களது முதல் சாம்பிளை உருவாக்கி காட்சிக்கு வைத்தோம்.
உண்மையாக சொன்னால், நாங்கள் சில எஞ்சினியர்கள் அதற்காக உயிரைக் கொடுத்து இரவும் பகலும் உழைத்திருந்தோம். ஏனெனில், அந்த ஃபில்டர் சிறிய component தான் என்றாலும் அதன் configuration சிக்கலானதாக இருந்தது. அது எஞ்சினின் உள்ளே வரும் ஒரு உதிரிபாகம். அளவுகளில் சின்ன மாறுபாடுகள் இருந்தால், பக்கத்தில் உள்ள இன்னொரு பொருளுடன் மோதும். அது ஆயிலை ஃபில்டர் செய்யும் வேகம் குறைந்தால் எஞ்சின் சூடாகும் போன்ற நிறைய உப நிபந்தனைகள் இருந்ததால், அதை உருவாக்குவது அத்தனை எளிதானதாக இல்லை. ஆனால் அதை நீங்கள் பார்த்தால், உங்கள் வீட்டில் இருக்கும் வடை கரண்டியை இன்னொரு கரண்டி மீது வைத்து வெல்டிங் அடித்து அதன் முன்னும் பின்னும் ஒரு சைலன்சர் டப்பாவை ஒட்டவைத்து, உள்ளே காபி வடிகட்டும் பில்டரை அடுக்கி வைத்தது போல காமெடியாக இருக்கும். ஆனால் அதுவோ எங்களது ரத்தத்தை உறிஞ்சிவிட்டு அமைதியாக Quality Department ன் மேசையில் குந்தியிருந்தது.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஜப்பானியன் தனது ஆங்கில மொழி பெயர்ப்பாளப் பெண்மணியுடன் எங்களது தொழிற்சாலையையும் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த proto type சாம்பிளையும் பார்ப்பதற்கு வந்தான். நாங்கள் புதுப் பெண்ணுக்கு சிங்காரித்து வைப்பதைப் போல அந்த ஃபில்டருக்கு பொட்டு மட்டுதான் வைக்கவில்லை. அதற்காக அந்தத் துறையில் நாங்கள் கத்துக்குட்டி என்றும் நினைத்துவிடாதீர்கள். இந்திய அளவில் இருந்த முன்னணி ஆட்டோ giants களுக்கு இருபதுக்கு மேற்பட்ட வித விதமான ஃபில்டர்களை தயாரித்து சப்ளை செய்து வந்த ஜாம்பவான்கள் நாங்கள்.
அவன் வந்து கம்பெனியை சுற்றிப் பார்த்தான். பிறகு சம்பவ இடத்துக்கு வந்தான். அவன் கொடுத்திருந்த ரியல் டைம் ஃபில்டரையும் நாங்கள் தயாரித்த ஃபில்டரையும் அருகருகே வைத்து மேலோட்டமாகப் பார்த்தான். நாங்கள் அதன் manufacturing sequence குறித்து அவனுக்கு விலக்குவதற்காக எங்கள் ஆங்கிலத்தை தூசு தட்டி அந்த மொழி பெயர்ப்பாளர் பெண்ணை பார்த்தோம். அவள் சில கேள்விகள் கேட்டுவிட்டு, அவனிடம் விளக்கினாள். நாங்கள் மேற்கொண்டு விளக்கத் துவங்கியபோது, அவன் அதெல்லாம் தேவையில்லை என்று சொல்லிவிட்டு, “ஒரு மணி நேரத்தில் எத்தனை ஃபில்டர்கள் செய்யமுடியும்” என்று கேட்டான். நாங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை செய்ய முடியும் என்பதாகத்தான் எங்களது manufacturing process ஐ திட்டமிட்டு வைத்திருந்தோம். அந்தக் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை. ஃபில்டர் வலையையும், அதைத் தாங்கும் பைப்பையும் எப்படி இணைப்பீர்கள் என்று கேட்டான். பித்தனை சால்டரிங் என்று சொல்லிவிட்டு அதைக் காண்பித்தோம். அதில் எடையே இருக்காது, எதற்கு இவ்வளவு கனமான வெல்டிங் அதன் மீது செய்ய வேண்டும் என்று கேட்டுவிட்டு, ஒரு புதிய வெல்டிங் டெக்னாலஜி பற்றி சொல்லி, அது உங்களிடம் இல்லையா என்று கேட்டான். நான் மட்டும் அதைப் பற்றி படித்திருந்தேன். (இந்த இடத்தில் BHEL பற்றி சொல்லவேண்டும். வேறொரு சமயத்தில் சொல்கிறேன். வெல்டிங் பற்றிய தொழில் நுட்பத்தில் அந்நிறுவனம் ஒரு அறிவுச் சுரங்கம்) என் சக நண்பர்களுக்கு அப்படி ஒரு சம்பவம் இருப்பதே தெரியவில்லை.
அன்று அவனிடம் நாங்கள் காட்டிய எங்களது தொழில் நுட்பம் அனைத்தும் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் பழமையானவை. CNC பைப் பெண்டிங் மெஷினைத் தவிர மீதி அனைத்து எந்திரங்களுமே மரபான பழைய மெஷின்கள். ஒரு புராதன பணிமைனை போல அது அவனுக்குத் தோன்றியிருக்கவேண்டும். அந்த ஆர்டர் எங்களுக்குக் கிடைக்கவில்லை. காரணம் நாங்கள் முட்டாள்கள் என்பதல்ல. அவன் சொல்லும் குறைந்த உற்பத்தி விலைக்கு எங்களால் அந்த ஃபில்டர்களை உற்பத்தி செய்ய முடியாது என்கிற கள யதார்த்தம் அவனுக்குப் புரிந்தது. அவனிடம் பேசியபிறகு எங்களுக்கும் அது புரிந்தது.
இதை ஏன் விரிவாக இங்கு சொல்கிறேன் என்றால், இதன் மூலம் நான் கவனப்படுத்த விரும்புவது முக்கியமான இன்னொன்று. எங்களால் எப்படி இந்த புராதான காலத்து தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு Ashok Leyland, TVS போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு லாபகரமான வகையில் உதிரிபாகங்களை சப்ளை செய்ய முடிந்தது? எங்களுக்கு எப்படி விலை கட்டுப்படி ஆனது? ஏனெனில் எங்களுக்குக் கட்டுப்படியான விலையில் தான் அவர்கள் எங்களுக்கு காசு கொடுத்து வாங்கினார்கள். அதை கார்களின் விலைகளில் ஏற்றித்தான் மக்களுக்கு விற்றார்கள். மன்மோகன் வந்து வெளிநாட்டினருக்கு கார் சந்தையைத் திறந்து விட்டபோது, அதன் உதிரி பாக உற்பத்தியை நீங்கள் இந்தியாவில்தான் செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவேண்டும் என CII (confederation of Indian industries) அரசுக்கு கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்தார்கள். உடனே இங்கு இருக்கும் ஆட்கள் எல்லாம், அதுதானே சரி என்பார்கள். அதில் இருக்கும் பிரச்சினைகளை தனியாக எழுதவேண்டும். எவ்வளவு உப பகுதிகள் வருகின்றன பாருங்கள். சரி நாம் பிரதான விஷயத்தைத் தொடர்வோம்.
நான் மேலே சொல்லியிருக்கும் இந்த தொழில் நுட்ப சந்தையைத்தான் சீனா உலக அளவில் கைப்பற்றியிருக்கிறது. நீங்கள் விரும்பும் specification கொண்ட ஃபில்டர்களை ஆர்டர் கொடுத்த ஒரு வாரத்திற்குள், நீங்கள் சொல்லும் எண்ணிக்கையில் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கேந்திரங்களை ஆயிரக்கணக்கில் சீனா உருவாக்கி வைத்திருக்கிறது. ஃபில்டர் என்பது ஒரு உதாரணம்தான். பேரிங் வேண்டுமா, ஷாஃப்ட் வேண்டுமா, ஹப் வேண்டுமா, வால்வ் வேண்டுமா எது வேண்டும் என்றாலும் அங்கு குறைந்த விலையில் விரைவாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உண்டு. ஒரு கார் நிறுவனம், இங்கு அதே ஃபில்டரைத் தயாரிக்க 4000 ரூபாய் ஆகும் என்றால் சீனா அதை 400 ரூபாய்க்குத் தயாரிக்க முடியும். இதன் அர்த்தம், தரத்தில் அவர்கள் சமரசம் செய்துகொள்கிறார்கள் என்பதல்ல. கொசு பேட்டை வேண்டுமானால் குப்பையாகத் தயாரிக்க முடியும். எஞ்சினியரிங் உதிரிபாகத்தை அப்படி செய்ய முடியாது. எப்படி சாதித்தார்கள்?
சிறுகச் சிறுக அவர்கள் ஜப்பான் உள்ளிட்ட பல முன்னேறிய நாடுகளின் தொழில் நுட்பங்களை நகல் எடுத்து தங்களுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டார்கள். ஆட்டோ உதிரி பாகங்கள் சிறிய ஏரியா மட்டுமே. கனரக எந்திரங்கள், மெடிக்கல் உபகரணங்கள், oil & gas துறையில் பயன்படும் பொருட்கள், garments என்று பறந்து விரிந்த எல்லா துறைகளிலும் அவர்கள் அடைந்திருக்கும் தூரம் மலைக்க வைக்கக் கூடியது.
சீன அரசின் தொழிற்கொள்கை இந்த Infrastructure களை அட்டகாசமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. Technology, Human Resources, Logistics, International Market இவை நான்கையும் அவர்கள் சீரிய முறையில் ஒருங்கினைத்திருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று நல்ல முறையில் தொடர்பு கொண்டவையாக தகவல் இடைவெளி இல்லாதவையாக அவை பராமரிக்கபப்டுகின்றன. அப்படித்தான் அவர்கள் உலக சந்தையை எதிர்கொள்கிறார்கள். தொழில் நுட்பத்தையும், மனித வளத்தையும் விரைவாகவும் செறிவாகவும் இணைத்ததே அவர்களது முதல் வெற்றி. ஒரே வாரத்தில் கொரோனா மருத்துவமனை கட்டியதை மட்டும்தானே பார்த்து பிரமித்தீர்கள். அவர்கள் அதை எத்தனை விரைவாக dismantle செய்தார்கள் என்று கவனித்தீர்களா? திட்டமிடலுக்கும், ஒருங்கிணைப்புக்குமான பாடம் அது. துறை சார்ந்த செமினார்களில் நாங்கள் நுணுக்கமாக வலியுறுத்தும் பாடம் அது.
இப்போது நான் சொல்லிக்கொண்டிருக்கும் ஒவ்வொன்றையும் சீனத் துதி என்பதாக புரிந்துகொள்ளாதீர்கள். அவர்களின் வளர்ச்சியை நான் ரொமாண்டிசைஸ் செய்யவும் இல்லை. ஒரு எஞ்சினியராக சில முக்கியப் புள்ளிகளை பொதுப் பார்வைக்கு கவனப்படுத்துகிறேன். சீனாவின் சமூக விளைவுகள் குறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். லடாக் எல்லையில் தங்களுக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களைக் சீனா கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஆகும் நேரமும் நமக்கு ஆகும் நேரமும் ஒப்பிட முடியாத வேறுபாடு கொண்டது. இதன் பொருள் நமது வீரர்கள் திறன் குன்றியவர்கள் என்பதல்ல. ஒரு எஞ்சினியராக, ஃபில்டர் designing & manufacturing குறித்த திறன் கொண்டவன் நான் என்றாலும் ஒரு ஜப்பானியன் முன்னால் நான் எப்படி கையறு நிலையில் இருந்தேனோ அதேதான் எல்லையில் இருக்கும் ராணுவ வீரனும். இந்தப் புரிதல் வெறும் தொழில் நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல. அரசியல் பிரக்ஞையுடன் தொடர்புடையது.
இந்தப் பின்னணியில் வைத்துதான் நமது அரசின் தொழிற் கொள்கையில் இருக்கும் போதாமைகளையும், அதன் ஒருங்கிணைப்பில் இருக்கும் இடைவெளிகளையும் நாம் மதிப்பிட வேண்டும். அதற்கு, வீரம் என்பதன் பொருள் இன்று மாறியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அரசியல் தலைமை என்பது சவால் விடும் பண்பில் அல்ல மாறாக தொலை நோக்கு கொண்டதாக, தொழில்நுட்பத்தையும் மனித வளத்தையும் இணைக்கும் ஆற்றல் கொண்டதாக, அந்த ஆற்றலை சிதைக்கும் பிரிவினைவாத மனநிலையை வளர்க்காததாக இருப்பதில் இருக்கிறது. ஏனெனில் இதுவொரு சங்கிலி போன்று செயல்படும் தன்மை கொண்டது. ஒன்றின் தோல்வி மற்றதில் எதிரொலிக்கும். இன்று இந்தியா எதிர்கொள்ளும் சவால் அதுவே.
ஒரு நவீனத்துவ அரசு கைகொள்ள வேண்டிய வழிமுறைக்கு எதிராக, இந்த அரசு சுவரில் முட்டிக்கொண்டு நிற்கிறது. அதுவே கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எல்லையில் வம்பிழுக்கும் அண்டை நாட்டுக்காரனை எதிர்கொள்வதன் சூட்சுமம் சொந்த நாட்டின் உள்ளே உள்ள கட்டமைப்பில் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்ட அரசுகள் மட்டுமே நவீன அரசு என்னும் சுட்டுதலுக்குத் தகுதியுடையவை!

----

Balasubramaniam Muthusamy யின் கட்டுரை 

உண்மைகளுக்கப்பால் ஒரு உலகம்!
உரத்த ஓசை (loudest voice) என்பது சமீபத்தில் வெளியான ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் பெயர். ‘ஃபாக்ஸ் ந்யூஸ்’ என்னும் அமெரிக்கத் தொலைகாட்சிச் செய்தி நிறுவனத்தின், துவக்க முக்கிய மேலாண் அலுவலர், ரோஜர் ஐல்ஸின் வாழ்க்கையை ஒட்டிய ஒரு திரைப்படம்.
வழக்கமாக, செய்தி நிறுவனங்கள், செய்தியை நடுநிலையாக வழங்க வேண்டும் என்னும் அடிப்படையில் செயல்படுவார்கள். செய்தி வெளியிடுவதில், உளச்சாய்வுகள் இருந்தாலும், நடுநிலை என்பது ஒரு அடிப்படைக் கருதுகோளாக இருந்தது. அமெரிக்க அரசியல் கன்சர்வேட்டிவ், லிபரல் என இருதரப்பாகப் பிரிந்திருக்கிறது..
ரோஜர் ஐல்ஸ், தொலைக்காட்சி ஊடகப் பார்வையாளர்களில், கன்சர்வேட்டிவ் பார்வையாளர்களை, ஒரு சந்தைப் பிரிவாக கணித்து, அவர்களுக்கென ஒரு செய்தி நிறுவனமாக ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தை உருவாக்கினார். அதன் செய்திகள் அந்த அரசியல் நிலையைச் சார்ந்துதான் இருக்கும். விவாதங்களும் அப்படியே. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதில், இந்த நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது என அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். (இந்தியாவில், இந்தக் கருதுகோளைப் பின்பற்றி ரிபப்ளிக் டி.வி என்னும் சேனல் துவங்கப்பட்டிருக்கிறது)
பல ஆண்டுகளுக்கு முன்பு, டொனால்ட் ட்ரம்ப், அன்றைய அதிபர் பராக் ஒபாமா ஒரு கென்யர் என்னும் சர்ச்சையைக் கிளப்பினார். துவக்கத்தில் இதை ஒபாமாவும், கட்சி ஆதரவாளர்களும், கேட்டு சிரித்தார்கள். ஒபாமா, தன் வருடாந்திரப் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்வில், இது போன்ற ஒரு உண்மையில்லாத செய்தியைச் சொன்னதற்காக, ட்ரம்பைக் கேலி செய்தார். லயன் கிங் என்னும் கார்ட்டூன் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை வைத்துப் பகடி செய்தார். ஹவாய்த் தீவில், தான் பிறந்த மருத்துவமனையில் இருந்து, தனது பிறப்புச் சான்றிதழை மக்கள் மன்றத்தில் வைத்தார். தர்க்க ரீதியாக, அவர் செய்தது சரி என்றே தோன்றும். ஆனால், உண்மையில், அந்த வாக்குவாதத்தில், மக்கள் மன்றத்தில் வென்றது டொனால்ட் ட்ரம்ப். ஓபாமா அமெரிக்கர் அல்ல என்னும் மனச்சாய்வை தமது ஆதரவாளர்களிடையே உறுதி செய்து விட்டார். பின்னர் அதே ரீதியில், அமெரிக்காவுக்குள் வரும் வந்தேறிகளால், அமெரிக்கர்களுக்கு வேலைகள் பறிபோகின்றன. வாழ்க்கைத் தரம் குறைகிறது என ஒரு அரசியல் முழக்கத்தை முன்னெடுத்தார். அதைத் தடுக்க, அமெரிக்காவுக்கும், மெக்சிக்கொவுக்கும் இடையில் பெரும் சுவர் ஒன்றைக் கட்டப் போவதாக அறிவித்தார். டெமாக்ரட் அரசியல்வாதிகளும், செய்தியாளர்களும், இந்தத் திட்டம் எவ்வளவு முட்டாள்தனமானது; வீண் செலவு என்னும் ரீதியில் இந்தத் திட்டத்தை விமரிசித்தார்கள். சுவர் கட்டுதல் பற்றிய எந்த அடிப்படைத் தரவுகளும் இன்றிப் பேசுகின்றார் என்பதே அவர்கள் நிலையாக இருந்தது. ஆனால், குடியேற்றத்தைத் தவிர்க்க, சுவர் என்பது, இந்தக் குடியேற்றத்தால் பாதிக்கப்படப் போவதாக, நம்பிக்கொண்டிருந்த வாக்காளர்களுக்கு ஆசுவாசத்தைக் கொடுத்தது. பின்னர் நிகழ்ந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வென்றார்.
சமீபத்தில், நான்கு பெண் காங்கிரஸ் உறுப்பினர்களின், அவர்களின் பழைய நாடுகளைக் குறித்து, ஒரு செய்தி வெளியிட்டார். அவர்கள் நால்வரில், மூவர் அமெரிக்காவில் பிறந்தவர்கள். ஒருவர் அமெரிக்காவில் குடியேறி, குடியுரிமை பெற்றவர். அவர்கள் அனைவரும், பல்வேறு தேசத்தில் இருந்து வந்திருந்தாலும், இன்று அவர்கள் அமெரிக்கக் குடிமக்கள். காங்கிரஸ் பிரதிநிதிகள். ஆனால், ட்ரம்ப் சொன்னது இதுதான், ‘மோசமான, ஊழல் மலிந்த நாடுகளில் இருந்து வந்திருக்கும் இந்த டெமாக்ரட் காங்கிரஸ் பிரதிநிதிகள், உலகின் உன்னதமான நாடான அமெரிக்காவுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். அவர்கள் ஏன், குற்றம் மலிந்த தங்கள் நாடுகளுக்குச் சென்று, அவற்றைத் திருத்தி விட்டுப் பின்னர், நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்லக் கூடாது’. ட்ரம்ப் பேசியது உண்மைக்குப் புறம்பானது. வந்தேறிகளைப் பற்றிப் பேசவேண்டுமெனில், ட்ரம்பின் மூதாதையர்களே அமெரிக்காவில் வந்தேறிகள்தாம். அமெரிக்கக் குடிகளான அந்தப்பெண்கள் நால்வரும், தங்களது பூர்விக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கையில், ட்ரம்ப், தனது பதின்பருவ ஆதரவாளர்களிடையே பேசச் சென்றார். பேச்சின் இடையே, அவரது பதின்பருவ ஆதரவாளர்கள், ‘அவர்களைத் திரும்ப அனுப்புங்கள்’, எனக் கோஷமிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘அவர்கள்’ என்பது, ட்ரம்ப் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்த, அந்த நான்கு பெண் காங்கிரஸ் பிரதிநிதிகள்.
சமீபத்தில், இங்கிலாந்து நாட்டில் விவாதிக்கப்படும், ‘ப்ரெக்ஸிட்” ப்ரச்சினையும் அவ்வாறு ஒரு தளத்தில்தான் விவாதிக்கப்படுகிறது. இன்று இங்கிலாந்து நாட்டின் குடிமகன்களாக, அரசியல்வாதிகளாக இருக்கும் பல இந்திய வம்சாவளியினர், ”கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து, குறைந்த ஊதியத்துக்கு வெளிநாட்டினர் வந்து விடுவார்கள் எனவே நாங்கள் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகவேண்டும்”, என வாதிடுகிறார்கள். இங்கிலாந்தின் பிரதமராக இன்று இருக்கும் போரிஸ் ஜான்சன், ஒரு கன்சர்வேட்டிவ் அரசியல்வாதி. இனவாதச் சொல்லாடல்களுக்குப் பேர் போனவர்.
பீச்சில் செல்ல நாயை விளையாட அழைத்து வரும் உரிமையாளர், ஒரு பந்தைத் தூர எறிந்து, அதை எடுத்து வரச் செய்வார். எடுத்து வந்ததும், பந்தை மீண்டும் இன்னொரு திசையில் எறிந்து, மீண்டும் எடுத்து வரச் செய்வார். இது, விளையாட்டின் மீதான, நாயின் மீதான தன் மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி.
கடந்த சில வருடங்களாக, வலதுசாரி, கன்சர்வேட்டிவ் அரசியல் நிலைகள், மிகக் குறுகிய தேசிய வாதங்களை, மிக அபத்தமான வழிகளில் முன்வைக்கின்றன. முற்போக்கு சக்திகளும், இடது சாரிகளும், அதற்கான எதிர்வினையை ஆற்றிக் கொண்டிருக்கின்றார்களே தவிர, ஒரு புதிய, வருங்காலத் திட்டத்தை, கனவை, மக்களுக்கு நம்பிக்கை வருமளவுக்கு முன்வைக்க வில்லை. வலதுசாரி சக்திகள், தங்கள் மீது விமரிசனம் வைப்பவர்களை, பொய்யர்கள், தேச விரோதிகள், தீவிரவாதிகள் என முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள். முற்போக்கு சக்திகள், மிகவும் கடினமாக உழைத்து, தாங்கள் பொய்யர்கள் இல்லை என தரவுகளை முன்வைத்து நிறுவிக் கொண்டிருக்கிறார்கள். வலதுசாரிகள், “டாமி கேட்ச்” என ஒரு அரசியல் சொல்லாடலை உருவாக்க, மற்றவர்கள் வெறுமனே அவர்களுக்கு எதிர்வினை மட்டுமே ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று உலக அரசியல், நாற்சந்தியில் நின்று கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், மக்களாட்சியை வலுப்படுத்தும் என்னும் நம்பிக்கைக்கெதிராக, அந்தத் தகவல் தொழில்நுட்பத்தை வைத்தே மக்களை திசை திருப்பும், ஒடுக்கும் சாத்தியங்கள் அதிகரித்திருக்கிறது.

Count The Moments
Count The Moments

0 Comments:

Post a Comment

<< Home